சப்த கன்னிமார் பாடல்
*சப்த கன்னிமார் பாடல்*
முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே மூவரிய தெய்வக் கன்னி ஏழுபேரும் தன்னரிய நாரணரைத் தேடித்தேடித் தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்தத் தென்னிலங்கை மணவை நகர் பதியிதான சீமைப்பதி தெட்சணத்தில் சென்றுகண்டு மன்னவனும் தேவியுமாய் மகிழ்ந்த ஞாயம் வளமையுடன் கதையாக வகுக்கலுற்றார்
வகுப்பதற்கு இன்னதென் றறியேன் நானும்
வகைவிபரம் நீரருளி வரமே தந்து
தொகுப்பதற்குச் சிவமதுவே துணையாமென்று
சொல்லுகிறேன் தொல்புவியில் சுருதியாக இகடமதற்கு இல்லாமல் ஈடேறத் தீர்த்து
எப்போதும் எனையாளும் எம்பிரானே
யுகப்பதியில் மேவியுதித்து எழுந்த நாதா உன்னுவமை சொல்லுதற்கு உதவிகாப்பாம்
காப்பாம் சிவம்பர ஆதி நாராயண கண்மணி யானவரே கன்னிமார் பாடலுக்கு உன்னை நினைத்திடக் கல்விக்குதவுவாயே
சேர்ப்பாய் உந்தன் அருள் சிந்தையில் வைத்திருந்த தெய்வ மடவார்
திருக்கதை கூறச்செயல் குரு நீயல்லால் சீமையில் ஆருளரோ
முக்திபெறும் தெய்வமாதர் ஏழுபேரும் முன்னான்கு காலமெல்லாம் மூண்ட வனத்தில் கூண்டதவம் செய்து முற்றும் நிறைவேற்றிப்
பக்தி யுடன் நற்சொல்லை வைத்துப் படிமுறை தட்டாமல் பாரான தெட்சண மீதானதில் மாதுபண்பாகக் கண்டு உம்மையும்
வாதாடி அவள் பெற்ற மக்களைக் கேட்டுன்னை வருடியே நாள்தோறும் சீரான மக்களை ஈந்துபின் ஏழ்வரைச் சேர்த்து மணமருளித்
தேவியும் மக்களும் மன்னவராகி நீர்சீமைதனை ஆண்டதுவும்
பண்பான இந்தக் கதைபடிபேன் என்ற பாவவினை ஆனதெல்லாம்
பறக்கும் கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்தது போலொக்கும்
குயில்நின்று கூவிட மந்திகுரங்குகள் கூப்பிட்ட தொக்குமென்றே
கூறும் செந்தமிழ்ப் பாவணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா
குற்றமதி லொன்றும் வராமல் காத்திடக் கர்த்தனருள் வேணும்
கூடும் பரவெளி ஆனந்திமார் தேவி கூடி அருள்புரிவாய்ச் சித்த மிரங்கியே தேவிமனோண்மணி சிந்தையிலே யிருந்தும்
சொல்லும் கதை தனக்கல்லல் வராமலே தோகை அருள்புரிவாய்
ஆண்ட வனாம் அரி நாராயணருடன் உலகில் மிகவாழும்
ஆதிபராசக்தி தேவி ஏழுபேரும் அன்பா இதற்குதவும்
கூண்டபுகழ் பெற்ற சான்றோரை ஈன்ற கோதை
ஏழுபேரின் கோலத்திரு கலியாணத் திருக்கதை
கூற என்குரு நாதனிது காப்பதாமே
சீரணி மாயன் தானும் தெட்சணம் மீதில் வந்து
காரணமான கன்னி காரிகை ஏழுபேரை
நாரணரர் முகூர்த்தம் செய்ய நாடொரு குடைக்குள் ஆண்ட
காரணம் தன்னைக் கூறக் கமலப் பூமகளே காப்பாம்
சீரான கன்போயிருக்கசிலகாலம் சிவனார்க்குப் பூஜை செய்து
நேராய்மிக இருக்க அந்தநேரிழை கன்னிமார் ஏழுபேரும்
நாராயணர் தொடர்ந்து அந்த நல்ல வனத்தில் சுனையருகில்
ஆரார்மிக அறியார் அருவனம் பூஞ்சுனை யானதிலே
போகஅவ் விடந்தனிலே அந்தப்பெண்கள் குளிக்கும் சுனைப்புதுமை
வாயால்தொகுத்து உரைக்க இந்த வையகமதில் யாதுளதோ
தேவர்மிகப் போகார் தெய்வேந்திரன் வானவர்போக அறியார்
மூவரும்போக அறியார் முனிசித்தாதி மார்களும்போக அறியார்
ஒருவர் கண்காணாத அந்த உற்றசுனைக் கரையானதிலே
ஆலிலை மேல்துயிலும் நல்ல அச்சுதன் பச்சைமால் அங்கேசென்று
ஏலமடவாரின் துகிலெல்லாம் எடுத்தொரு ஆலத்தின்மேல்
ஒளித்தங்கே வைத்ததும் ஒண்ணுதலார் கன்னி ஏழுபேரும்
குளித்தோடி அக்கரையில் வந்து கோலங்களைப் பார்க்கும் வேளையிலே
காணார் துகில்தனையும் கருமேகத்தை நோக்கிய ஆலமரத்தை
அண்ணார்ந்தவர் பார்த்து ஆடையைப் பார்க்கவே நோக்கும்வேளை
கண்டாரே ஆலமயத்தில் அவர்க்கான துகில் அடையாளம் ஒன்று
கொண்டாடி கன்னியர்கள் கோகோகோ என்ன கொடுமை என்பர்
எடுத்தாரைக் கண்டிலமே இதுஎன்ன மாயமோ பெண்ணரசே
கடுத்தான கற்பினையோஇது கம்மாயமோ பெண்கன்னியரே
பூமிதனில் இருந்து நம்மள் பொன்துயில் ஆலில் பறந்ததென்ன
சுவாமி சிவனார்க்குப் பொல்லாத தோசத்தைச் செய்தோமோ
கர்மவிதிப் பயனோ வேதன்கட்டளை இட்டபடி தானோ
நம்மள் துகில்பறந்து நடுஆல மரத்திலே போயிருக்க
என்ன விதிப்பயனோ எடுத்தாரைக் கண்டிலோம் பெண்ணரசே
உன்னி எடுப்பதற்கு ஒருஆளை இங்கு கண்டிலமே
என்றே மிகப்புலம்பிக் கன்னி ஏழுபேரும் மிகத்திரண்டு
ஈசன்செயல் என்று மரத்திலந்த தேவிமார் ஏறவேணும் என்று
மிகத்துணிந்து மெல்ல ஏறினாள் கன்னி இளையவளும்
கூறித் துகிலெடுக்கும் வேளை கோலத் திருமால் ஒருகோலம் கொண்டார்
கொண்டதோர் கோலம்தன்னை அந்தகோதை ஏழுபேரும் கண்டிருந்து
இன்றே கைவாச்சுது என்று எரிக்கத் துணிந்தாரே நாரணரைத்
தீப்போல் மிகஆவி அந்தச்சொந்த சுனைக்கரை யானதிலே
வெயில்போல் கொழுந்து விட்டுமுனி நல்லகனலாகக் கிடந்தார்
கண்டந்தக் கன்னியரும் கனலாய் எரித்திட்டோம் என்று சொல்லிக்
கொண்டாடிக் கன்னியர்கள் பின்னும் குக்களித்துச் சுனையாடவென்று
துகிலைக் கரையில் வைத்து அந்தத்தோகை சுனையில் குளித்திடவே
வெயிலான மாயவருமொரு உபாயம் நினைத்தார் உலகளந்தார்
இனியிந்தக் கன்னிகட்கு மெத்தவே விறையலைதான் கொடுத்துத் தணியாத அக்கினியை வந்து தழுவிடக் கற்பை அழிக்கவென்று
நினைத்தே வருணனையும் நெடுவாயுவையும் அங்கே வரவழைத்து
நினைத்தே விறையல் கொண்டு நன்னுதல்மார் ஏழுபேரை இப்போ
மசக்கிக் கொண்டுவா வென்றொரு மாயமதுக்கு விடை கொடுத்தார்
திசக்கிய மாயமது அந்தத்தேவி ஏழுபேர்க்கும் சென்றதுவே
அப்போது அங்கே வருணன் ஆகாசமதிலே நின்று கொண்டு
பொன்பொரி நரல்போல அந்தந்தப் பெண்களின்மேலே தூவினானே
தப்பாமல் வாயுவதும் வளர்சதிரம் விறைக்கவே வீசினனே
மெய்யான கன்னியர்கள் மெத்த விறையலால் உள்ளம் நடுங்கி
ஒடுங்கி மிகக்கொடுகி அந்தஉள்ளம் தடுமாறும்
பெண்களெல்லாம்
இந்த விறையலுக்கு நாமள்ஏது செய்யப் போறோம்
சிந்தை தளருதடி உடல்சிலிர்க்கு முகமெல்லாம் வாடுதடி
ஆராரு செய்ததுவோ பெண்ணே ஆறாட்டம் பொறுக்க முடியதில்லை
கூரல் மிகக்காய ஒருகொடுந் தணல் தன்னிலும் காணோமே
காணோமே பெண்ணரசே நம்மள்கர்ம விதிஇது தங்கையரே
வாணாள் அயருதடி என்று மாதுகன்னிமார் ஏழுபேரும்
பார்க்கின்ற அப்பொழுது அந்தப் பாரான ஆவிக் கரையருகில்
தாக்குகின்ற அக்கினியும் மெத்தத்தணல் போலக்குமுறி எரிந்திடவே
கண்டுஅகம் மகிழ்ந்து நல்ல காரிகை கன்னிமார் ஏழுபேரும்
பண்டு மறைந்தநிதி நல்லபண்பாகக் கண்ட பாவியைப்போல்
வந்துகுளிர் காய்ந்துநல்ல மங்கை ஏழுபேரும் போவோம் என்று
பந்துதனம் உடையார்அந்தப் பாவை ஏழுபேரும் சம்மதித்து வந்து மிக கனலை வட்டமிட்டே வளைந்து கொண்டு சந்துஷ்டியாய் மகிழ்ந்து தணலை ஆவி மிகத் தானிருக்க கொண்டாடி மாயவனார் ஒரு கோலமதால் கொள்ளைகொண்டு பண்டாரம் மகிழ்ந்திடவே அந்த பாவை ஏழுபேரும் கர்ப்பமுறறு
அண்டாமல்தான் நீங்கி இவரோவெனவே எரிக்க உன்னினர் கொண்டாடித் தாக்கிடவே அந்தக் கோதையின் கற்பழிந்து
எரிக்க மதியழிந்து அந்த ஏலங்குழலார் இயல்மறந்து
மதிக்கொத்த மாமயிலார் மாமுனியைக் கண்டு மதிஅசந்து
அய்யோ நம்பெண்ணரசே நம்மறிவு குலைந்தோம் ஆயிழையே
கையோ மிகஅயர்ந்து நம்மள் கர்மவிதி பயன்தானையோ
இத்தனைநாள் வரைக்கும் நாமள்இருந்த நெறியும் குலைந்தோமடி
சத்திக்கும் ஈசுரர்க்கும் நாமள்சாற்றும் மொழியேது தங்கையரே
வனத்திலே வந்தஇடத்தில் இந்த மாயம் வருவது அறிந்திலமே
புனத்தில் கிளிஅன்னமும் நம்மள்பேச்சும் கேட்காமல் போகுதடி
என்ன விதிவசமோ நம்மள்க்கு இட்ட விதிமுறை இப்படியோ
அன்னமடவாரே இதுயார் செய்த கைமசக்கு ஆனதுவோ
என்றே மிகப்புலம்ப முனிஏற்றின கர்ப்பம் உருத்திரண்டு
அன்றே ஒருமணிக்குக் கர்ப்பம் அவதரித்து அங்கேதான் பிறந்தது
பிறந்த பொழுதேதான் பெருமூச்சுவிட்டார் ஆயிழைமா ரெல்லாம்
மறந்தேமதி மயங்கி அந்த மக்களைப் பாராமல் மாமடவார்
நாணிமிக அயர்ந்து நடுநாட்டு ஊடே போகவென்று
கோணி மடவார்கள் கோகோ கோவென ஓடலுற்றார்
ஓடினார் பெண்களெல்லாம் ஒருநொடியதில் நில்லாமல்
தேடினார் வனத்தினூடே சிவசிவா சிவனே என்று
ஓடியே மடவாரெல்லாம் கொண்டதோர் நாணத்தாலே
வாடியே புலம்பிமாதர் வனத்தை நோக்கிப் போகின்றாரே
அய்யோ வனத்தில் சுனையாட அங்கே யிருந்து வரும்போது
மெய்யோ அறிய வழியிலொரு விசனத் தீது கண்டிலமேy
பையோடு அரவு மிகஅணிந்து பரமன் கயிலைக்கு ஏகவென்றால்
அய்யோ கயிலைக்கு உள்ளிருக்க ஆகாதெனவே ஓடலுற்றார்
ஓடுவார் கன்னியர்களெல்லாம் பதறி ஓம்நமசிவாய எனச்சொல்லி
நாடுவார் நமக்கு இவ்விதம்என நன்னுதல்மார் ஏழுபேரும் ஓடினார்
பொர்ப்ப வனத்தில் குளித்ததும் போச்சு
பொன்னார் கயிலை வாழ்ந்ததும் போச்சு
கற்போ குலைந்துபல கோலங்க ளாச்சு
காட்டில் பயந்து இருக்கவே விதியாச்சு
என்ன யென்ன பாவத்தைச் செய்தோமோ
கண்ணே இவ்விதி வந்தது அறியோமோ
வன்ன சிவனார் நம்மை மறந்தார்
மாதுமைத் தாயும் மறந்தாரோ
என்றந்தக் கன்னி ஏழு பேரும்
இயல்பாய் வனவாசம் போனார்
சென்றந்த வனவாசம் கண்டவர் மறைந்து
சிவனார் அருள்பெறவே தவசி நின்றாரே
நின்ற தவத்தின் நிலைமை கூறிட
நித்தனேஉன் சித்தம்அருள் செய்வாயே
மக்களை ஈன்றுவந்த மாமுனியருகில் வைத்து
வெக்கமும் மிகவேயாகி விழிநுதல் ஏழுபேரும்
சிக்கென வனத்தில் சென்றுஅவர் ஏழுபேரும்
அம்மை அருள்பெறத் தவசி நின்றார்
நின்றார் நெடுங்கான வனமானதிலே நித்தம்
கற்றோனைச் சித்தம் வைத்தே நின்றாரே
வண்டாடும் பூஞ்சுனையில் மாதரேழு
பேருங்குளித்து நித்தம் வருகையிலே
கோலம் வேறானதால் இவ்வனத்திலே சிவனே
தஞ்சமென்று எங்களை ஆளவருவாயே
வருவாய் வருவாய் நீ மகாபர ஈசுரனே
வந்தெங்கள் சங்கடம் தீர்த்தாட் கொள்வாயே
செவ்வாய் கருமேனி ஶ்ரீபத்மனாப பதியே சென்றே கடலில் துயின்ற பாரளந்த ஸ்ரீ பாதமே துணையாம்
ஐவர்க்கு உதவுவோனே ஆதி நாராயணனே
இந்த அவதாரத்தை காத்தருள் செய்யவேணும் பச்சைமாலே
தென்கடலில் துயின்ற பாரளந்த ஶ்ரீபாதமே துணையாம்
ஆடரவில் துயிலும் சிவசங்கரா சங்கரனே
ஆலிலையில் துயிலும் நாதனே ஆபத்துக் காத்தருள்வாய்
மனதில் அறியாமல் நாங்கள் மாது ஏழுபேரும்
வந்திடும் தீவினை அந்திடவே அருள் மாதுஉமை பாகனே
இனித்துயர் தீர்த்து ஏழுபேர்களும் ஈன்று வைத்த
ஏந்தலைத் தந்திந்த ராச்சியமும் ஆளவரம் தாரும் அய்யனே பண்டூசல்செய்த முனியவர் பாரியாய் எங்களையும் பண்டாகக் கலியாணம் இன்பமுடன் செய்து பாராளுதற்கு வந்தருள்
செய்யவேணும் சிவசிவா மாதுமணவை நகர்ப்பதியில் வாழ்பவரே
மேட்டு லாடமதில் மெல்லியர் கண்நாட்டி மேலுடல் எல்லாம் ஒருமித்து வில்வளைத்து நயனவில் வளைத்ததில் ஐந்து பூவைக் கட்டி நாற்பத்தொன்று பத்து ஆவிமடக்கிச் சயனமதில்மேவி வளர்ந்தபாகம் நாடித் தங்கள் தங்கள் வாக்கிலொரு சீர்நாட்டி அதிலோர்
விரலை நாட்டி மனம்நாட்டி நாக்குச்சுழி தாக்கி
நுனிமூக்கில் விழிநோக்கி நல்லறிவைக் கொண்டுவேறு கல்லறிவைப் போக்கி ஆக்கிச் சித்தியாய் நோக்கி மடவார்கள் வாசலெல்லாம் அடைத்தொரு வாசல் நோக்கிப் பஞ்சணையில் வஞ்சியை மிஞ்சவே இருத்திப் பார்க்கும் லாடமதில் நோக்கிநின்றார் ஏழுபேரும் இந்த நிட்டையாகப் பன்னிரண்டு வருடம் கால்இழகா வண்ணம் தவசி நின்றார் நின்றதவசில் மடவாரைக் கண்டு தேவரெல்லாம் நெட்டூரம் இத்தவம்தான் கெட்டி கெட்டி என்பார் மண்டலத்தில் இத்தவம் போலக் கண்டறியோம் கேட்டறியோம் விண்டறியக் கூடாத வெற்றிவெற்றி மேலோர் மெச்சினார் அப்படிஇருக்க ஆனகயிலை தன்னில் அம்மையுமை தானறிந்து தானேது சொல்லுவாள் செப்பமுடி யாததவம் தேவி ஏழுபேரும் நற்புடைய ஈசுரரைச் சென்று தொழுதேற்றி
நல்ல கன்னிமார் புதுமை நவிலலுற்றார் மாது கேட்டந்த ஈசுரரும் கெட்டிக் கெட்டி யென்ன
கேட்டாயோ உனதண்ணர் நாட்டம் இதுவென்றார் வாட்டமிலாப் பூஞ்சுனையில் வந்தவரைத் தொட்டு மாயம் செய்த ஏதுவினால் இந்தஞாயம் வந்தது பெண்ணே நாட்டமுடன் இந்தக்கதை பார்க்கப் போகவென்றால் நாரணர் வராமல் நாமள் போவ தேதோ கேட்டந்த ஈசுவரியும் கெட்டிகெட்டி என்று கருடாழ்வாரை நினைக்க உடனே அவர்வந்தார்
உற்ற உங்கள் அண்ணருடை ஊர்வளமை யெல்லாம் உரைத்துவிடு என்றாரே உலகளந்த மாலை சித்திரம்போல் பஞ்சவர்க்குச் செய்த உபகாரம் சிலகாலம் அங்கிருந்து சென்றார் வனத்தூடே வீரமுள்ள தெய்க் கன்னிமாரை வனமீதில் வித்தியாதர முனிபோலே வேசமொன்று எடுத்துக்
கூதலையும் கொந்தலையும் கோதையர்க்கு ஏவிக் கூத்தாடி மாயவனார் கொழுந்துதீப் போலானார் அக்கினி வேசம்கொண்டு அவர்கிடக்கும் மாயம் ஆரமணி கன்னியர்கள் கூதல் பொறுக்க மாட்டாமல் முக்கியமாய் அக்கினியை மோந்து வளைந்தனரே முனிமோகம் மிகத்திரண்டு மூன்று நாலுபிள்ளை பெற்றுவிட்டுக் கன்னியர்கள் மூச்சுவிட்டு ஓடி மீளும்சுனை தானிழந்து பெண்கள் ஏழுபேரும் அத்துவானக் கானகத்தில் அருந்தவசு நின்றார் அண்ணருமோ பிள்ளைகளை ஆவியே எடுத்து நாணாமல் பிள்ளைக்கு நாமம் சாணான் என்று நாடுபதி னாலறிய நாமமது இட்டு
காணாத கற்பகப்பால் கையதிலே கொடுத்துக் காளி என்ற தேவியுடை கையில் மிக ஈந்து வளர்த்துத் தருவாய் எனவே வாக்குமிகவாங்கி மாமுனியும் ஒருமலையில் மானாகச் சென்றார் இளைத்துத் தளர்ந்து கூட்டை அதில் போடவென்று எண்ணிவிட எம்பெருமாள் எய்துவிட்டான் வேடன் வேடனுக்குப் புத்திசொல்லிப் பஞ்சவரை வருத்தி வீரத்தன மெல்லாம் தண்டாலே அவர்வாங்கிச் சூரமுள்ள கூட்டை அதில் தான்கிடத்திப் போட்டுச் சூத்திர மாயவரும் ஸ்ரீரங்கம் மேவிச் சென்றார் இப்படியே உள்ள வரலாறு ஆனதெல்லாம் ஆதிகருட ஆழ்வாரும் அம்மையிடம் சொல்லி இப்போது கூட்டி வாறேன் அம்மா எனக்கு விடைதந்தால் என்றபடி பணிந்து கருட ஆழ்வாரும் நிற்க நல்லதுதான் அண்ணருடைய அதிகதிறம் கேட்டோம் நாலுமணி நேரம் ஆதி நாராயணரைக் கூட்டிவாறேன் மாது பார்வதி கயிலை வாழ்ந்து இருந்தாளே கயிலையில் மாதுதானும் கெட்டுடன் இருக்கும் போது ஒயிலுடன் கருடன் தானும் ஒருநொடி தன்னில் சென்று அகிலமும் அளந்தநாதன் அவரையும் கூட்டிக் கொண்டு கயிலையும் வந்து ஞாயம் கெட்டுடன் உரைக்கின்றாரே பசிதனக்கு உதவும் மாயப் பாவையர் ஏழுபேரும் திறமையாய்த் தவசுபார்க்கச் சீர்தனைச் செய்யும் என்றார் கறையிலா உமையாள்கூடிப் பார்க்கவே போனார் அங்கே
கான்வனம் தன்னில் சென்று கன்னியர் தன்னைக் கண்டு
தவம் தன்னை ஏற்றோம் வாருங்கோ வெளியில் என்றார்
வெளியிலே வந்துமாது விளக்கமே தீர்த்தோம் என்று தெளிவுடன் வெற்றி ஓங்கி வாழ்வைநீ தருவாய்ப் போற்றி
சீதமாங்குணச் செல்வனே போற்றி சிவசிவா சிவனே
போற்றி நீதவா நட்பு பெய்வாய்ப் போற்றி சிவசிவா சிவனே போற்றி மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரிசெல்வனே போற்றி
ஆதவா அரிநாராயணா போற்றி ஆதியே உந்தனைப் போற்றி போற்றி
மூவர்தேடியும் முற்றாதமுதலின் திருத்தாள் பதம் போற்றி தேவர்க்கு அரிய திரவியமே தெய்வமுதல் வேதச்சுடரே காவற்கு அரிய வனமதிலே கற்பை அழித்துக் கைவிட்டு அகன்ற தாவா துணையே எங்கணவா தயவே உனதுபதம் போற்றி
தீர்த்தோம் எங்களைத் தாமும் திரும்பக் கயிலைக்கு அழையாமல் சார்ந்தே எமது கணவரையும் தந்தே தரணி அரசாளத் தேர்ந்தே பயின்ற சிறுவர்களின் சிறப்பு ஏதும் குறையாமல் வாழ்ந்தே இருக்க வரமருளும் மாயா திருக்கும் மறைமுதலே
நாராயணரே நீரும் நல்லபெண்கள் ஏழுபேர்க்கும் சீரான வரங்கள் செப்பி அனுப்பும் என்றார் உடனே நாராயணரும் உள்ளம் மிகக்களித்து மடமாதே பெண்ணே மக்களுடன் தன்வழியில் சான்றோ ரிடமே தான் பிறந்து கன்னியர்களாய் இருக்கும் சமயம் யான் வருவேன் தெச்சணத்தில் தெச்சணத்தில் வந்து சிறந்த தவம் புரிந்து தவத்தை நிறைவேற்றித் தானிருக்கும் வேளையிலே உங்களையும் வருத்தி உற்றமணம் புரிவேன் இருபேரும் மக்களை எடுத்துப்புவி ஆண்டிடலாம் தந்தோம் வரங்கள் தான் பிறந்திடுங்கோ பெண்களே என்றார்
தந்ததோர் வரத்தை வாங்கித் தார்குழல் ஏழுபேரும் முந்தி நாம் ஈன்ற பிள்ளை மெய்க்குலம் தன்னில் தோன்ற மைக்குழல் மார்களெல்லாம் மானிடர் வழியே வந்தார்
மேற்குலம் தன்னில் மாதர் விருப்பமாய் வாழ்ந்தா ரன்றே.
*சப்த கன்னிமார் பாடல் முற்றும்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான தகவல் நன்றி ஐயா
ReplyDeleteஇயற்றியது யார் என்று சொல்லுங்கள் ஐயா