சித்தர்கள்
18 சித்த வரலாறு :-
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
சித்தர்கள் இயல்புகள்:-
சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்
சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
"சாதி,சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும்" சித்தர்கள் வாழ்ந்தனர். "விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி" ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், [சான்று தேவை] உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.
Comments
Post a Comment