பணம் வேண்டி ஏழை பட்ட பாடு
ஓர் ஏழை இருந்தான். அவனுக்குப் பண ஆசை வந்தது. எப்படியாவது ஒரு பூதத்தை வசமாக்கி விட்டால் பணத்தையும் தான் விரும்பும் எதையும் கொண்டுவருமாறு செய்யலாம் என்று அவன் கேள்விப்பட்டான், எனவே பூதத்தை வசமாக்கத் துடித்தான். பூதத்தைப் பிடித்துத் தருபவரைத் தேடி அலையலானான். கடைசியாக, சக்தி வாய்ந்த முனிவர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்து அவரது உதவியை நாடினான். பூதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார் அந்த முனிவர் அதற்கு அவன், முனிவரே எனக்காக வேலை செய்வதற்குத்தான் பூதம் வேண்டும். தயவுசெய்து அதைப் பிடிப்பது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று மிகவும் வேண்டினான். அதற்கு அந்த முனிவர், வீணாகக் குழம்பாமல் வீட்டிற்குப் போ என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
ஆனால் மறுநாள் அவன் மீண்டும் அந்த முனிவரிடம் சென்று எனக்கு ஒரு பூதத்தைக் கொடுங்கள்! எனக்குக் கண்டிப்பாகப் பூதம் வேண்டும் என்று கேட்டபடியே இருந்தான். வெறுப்புற்ற முனிவர் இதோ இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள். இதனை நீ சொன்னால் பூதம் வரும். நீ சொல்லும் வேலைகளையெல்லாம் அது செய்யும். ஆனால் ஒரு விஷயத்தில் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூதங்கள் பயங்கரமானவை. அதற்கு நீ எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தவறினாயோ அது உன் உயிரை வாங்கிவிடும் என்றார். அது ஒன்றும் சிரமம் அல்ல, அதன் ஆயுட்காலம் முழுவதும் வேலை கொடுக்க என்னால் முடியும் என்று கூறிப் புறப்பட்டான் அவன்.
அங்கிருந்து நேராக ஒரு காட்டிற்குச் சென்ற அவன் அங்கு அமர்ந்து, முனிவர் கொடுத்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்க ஆரம்பித்தான். நெடுநேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய பூதம் அவன் முன் தோன்றி, நான் ஒரு பூதம். உன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டுள்ளேன் ஆனால் நீ எப்போதும் எனக்கு வேலை தந்துகொண்டே இருக்க வேண்டும். அதில் தவறினால் அடுத்த கணமே உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கூறியது. உடனே அந்த மனிதன், எனக்கு ஓர் அரண்மனை கட்டு என்றான். தயார் அரண்மனை கட்டியாகிவிட்டது என்றது பூதம். பணம் கொண்டு வா என்றான். இதோ நீ விரும்பிய பணம் என்று பணத்தைக் கொடுத்தது பூதம். இந்தக் காட்டை அழித்து, இங்கே ஒரு நகரத்தை உருவாக்கு என்றான். அடுத்த கணமே தயார் என்றது பூதம். காடு அழிந்து நகரம் உருவாகியது. இனி என்ன? என்று கேட்டது பூதம். இனிமேல் இந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லையே, எதைக் கொடுத்தாலும் ஒரு கணத்தில் செய்துவிடுகிறதே என்று எண்ணிய அவனைப் பயம் பிடித்துக் கொண்டது. அதற்குள் அந்தப் பூதம், வேலை கொடுக்கிறாயா? இல்லை உண்னை விழுங்கட்டுமா? என்று உறுமியது. அந்த அப்பாவியால் அதற்கு எந்த வேலையும் கொடுக்க முடியவில்லை. அஞ்சி நடுங்கிய அவன் ஒரே ஓட்டமாக முனிவரிடம் ஓடினான்.
முனிவரிடம் சென்று, சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினான். நடந்தது என்ன என்று அவர் கேட்டதும், அந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை. நான் எதைச் சொன்னாலும் அது கண நேரத்தில் முடிந்துவிடுகிறது. வேலை கொடுக்காவிட்டால் என்னையே தின்றுவிடப் போவதாக இப்போது பயமுறுத்துகிறதுஎன்று பதிலளித்தான். அதற்குள் பூதம் அங்கேயே வந்து உன்னைத் தின்னப் போகிறேன் என்று கூச்சல் போட்டவாறே அவனைப் பிடிக்க எத்தனித்தது. அந்த மனிதன் நடுநடுங்கி, தன்னைக் காப்பாற்றுமாறு முனிவரிடம் கெஞ்சினான். முனிவர் அவனிடம், பயப்படாதே. நீ தப்ப நாள் ஒரு வழி கூறுகிறேன். சுருண்ட வாலுடன் அதோ ஒரு நாய் நிற்கிறதே, பார்த்தாயா? வாளை உருவி அதன் வாலை வெட்டு, அதை அந்தப் பூதத்திடம் கொடுத்து நேராக்கும்படிச்சொல் என்றார். அவனும் அவ்வாறே வெட்டி பூதத்திடம் கொடுத்து, இதை நேராக்கு என்றான். பூதம் சுருண்ட நாய்வாலைக் கையில் பிடித்துக்கொண்டு, நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் நிமிர்த்தியது. ஆனால் விட்ட மறுகணமே அந்த வால் சுருண்டுகொண்டது. மறுபடியும் சிரமப்பட்டு நிமிர்த்தியது. விட்டதும் உடனே சுருண்டுகொண்டது. மறுபடியும் மிகுந்த சிரமத்துடன் நிதானமாக நிமிர்த்தியது. விட்டால் பழைய கதைதான். இப்படியே நாட்கணக்கில் முயன்ற பூதம் இறுதியில் களைத்துவிட்டது.அதன்பிறகு அது அந்த மனிதனைப் பார்த்து என் வாழ்நாளில் இப்படி ஒரு சங்கடத்தில் மாட்டியதில்லை. முதிர்ந்த திறமை வாய்ந்த ஒரு பூதம் நான். இதுவரை நான் இப்படி ஒரு துன்பத்திற்கு ஆளாகியதில்லை. நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். நீ என்னை விட்டு விடு. நான் உனக்குக் கொடுத்த அனைத்தையும் அதற்குப் பதிலாக வைத்துக் கொள். நான் உனக்குத் துன்பமும் தர மாட்டேன் என்றது. அந்த மனிதன் மகிழ்ச்சியோடு பூதத்தின் உடன்பாட்டை ஏற்றுக் கொண்டான்.
இந்த உலகமும் நாயின் சுருண்ட வால்போல்தான் இருக்கிறது. அதை நிமிர்த்துவதற்காக மனிதர்கள் காலம்காலமாக முயன்று வருகிறார்கள், ஆனால் விட்டவுடனே அது சுரண்டுகொள்கிறது. சுருண்டுகொள்ளாமல் வேறென்ன செய்யும்? பற்றில்லாமல் செயல்புரிவது எப்படி என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதன் கொள்கைவெறியன் ஆக மாட்டான். இந்த உலகம் நாயின் சுருண்டவால்போன்றது. அது ஒருபோதும் நேராகாது என்று தெரிந்துகொண்டால், நாம் கொள்கைவெறியர்களாக மாற மாட்டோம். கொள்கைவெறி மட்டும் இல்லாதிருந்தால் உலகம் இப்போது இருப்பøதிதவிட எவ்வளவோ மேன்மை யுற்றிருக்கும்.கொள்கைவெறி மனித இனத்தை முன்னேற்றும் என்று எண்ணுவது தவறு. உண்மையில் இந்தக் கொள்கைவெறி மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் தூண்டி, ஒருவரோடு ஒருவர் சண்டையிடச் செய்து, இரக்கமில்லாதவர்களாக மாற்றி, அவர்களை அவர்கள் இருந்த நிலையிலிருந்து தாழ்த்தவே செய்யும்.
சுவாமி விவேகானந்தர்
Comments
Post a Comment