மாயம்மா தொடர் கட்டுரை பகுதி 5
மாயம்மா.....!- பகுதி-5
***********************
காயங்களோடு மாயம்மாவின் கோவிலுக்குள் ஓடிவந்த நாயின் சூடுபட்ட காயம் ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒரே நாளில் குணமாகி இருந்தது.
நாய்களின் மேல் மட்டும் மாயம்மாவிற்க்கு ஏன் இத்தனை அளவுகடந்த வாஞ்சை என்று எவராலும் இன்றுவரை அறிந்திருக்க இயலவில்லை.
பகவதியம்மன் கோவிலின் தெற்கு சுவற்றோரம் தன்னை சுற்றி படுத்திருக்கும் நாய்களுக்கு துணியால் சுற்றிய தலையணை வைத்திருப்பார். அதில்தான் அந்த நாய்கள் தலைவைத்து படுத்துறங்கும். இன்னும் ஒருபடி மேலே போய் அந்த நாய்களுக்கு குளிருமே என்று கிழிந்த சாக்கு பைகளை போர்வையாக்கி அவற்றிர்கு போர்த்தி இருப்பார். உண்மையான ஜீவ காருண்யம் என்பது இதுவல்லவா?. ஆனால் இதையெல்லாம் கண்ணுற்று பரிகசிக்கும் மக்களுளின் பார்வையில் அன்று இவளொரு பைத்தியக்கார கிழவி...!
நாய்களின்மேல் பரிவுகாட்டி வாழ்ந்த மாயம்மாவை தேடி அவள் மறைந்து பலகாலம் ஆனபின்பும் காயம்பட்ட கிருஷ்ணா அவள் ஆலயம் தேடி ஓடி வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதானே...?
காயம் குணமாகியும் மாயம்மாவின் கோவிலை விட்டு செல்ல மறுத்த கிருஷ்ணா கோவிலையே சுற்றி சுற்றி வலம் வந்தது. பூஜாரியும் தன் மகளுக்காக வாங்கி வைத்திருந்த பிஸ்கட்டுகளை அதற்கு உண்ண கொடுத்துவிட்டு பூஜைக்கு தயாரானார்.
மாயம்மாவிற்கு பூஜைசெய்யும் நேரத்தில் அங்கு வழிபட வரும் பெண்கள் குலவை இடுவது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக யாருமே வரவில்லை. பூஜாரியும் இன்று குலவை இட யாரும் வரவில்லையே என்ற சஞ்சலத்துடனேயே மாயம்மாவிற்கு பூஜை செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் அந்த பெரும் அதிசயம் அங்கே அரங்கேறியது.
குலவை இட ஆளில்லாமல் பூஜாரி தனி ஒருவராக மாயம்மாவிற்கு தீபாதாரனை காட்டி மணியடித்து பூஜையை ஆரம்பிக்கவும்....... அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணா பெருங்குரலெடுத்து குலவையிட ஆரம்பித்தது. நாயின் குலவை சத்தம் கேட்டதுமே பூஜாரியின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது. விடாமல் பூஜாரியும் மணியடித்த படியே பூஜையை தொடர கிருஷ்ணாவும் தன் குலவை சத்தத்தை நிறுத்திகொள்ளவில்லை.
பூஜை முடிந்து மணியோசையை நிறுத்தியவுடன் கிருஷ்ணாவும் தன் குலவை சத்தத்தை நிறுத்திவிட்டு மாயம்மாவின் காலடிகளில் வந்து படுத்து கொண்டது. பூஜாரி உணர்ச்சி மேலிட கிருஷ்ணாவை கட்டிபிடித்துகொண்டார். உன்னை மாயம்மாதான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள். இனி நீ எங்கும் போகவேண்டாம் என சொல்லிவிட்டார் வாஞ்சையாய் அதன் தலையைதடவி கொடுத்தபடியே.....! அன்றிலிருந்து இன்றுவரை ஐந்து வருடமாக கிருஷ்ணா இங்குதான் இருக்கிறது. காலை மாலை இருநேர பூஜையிலும் தவறாமல் குலவையிட்டு வருகிறது.
நான் கோவிலுக்கு சென்றது கார்த்திகை தினத்தன்று மாலை அந்தி கருக்கும் வேளையில். வெளியே சில பெண்கள் தீபம் ஏற்றி கொண்டிருந்தனர். நான் பூஜாரியிடம்"ஐயா பூஜை முடிந்துவிட்டதா? நீங்கள் பூஜை செய்யும்போது நாய் குலவை சத்தம் இடுவதை நான் பார்க்க முடியுமா?" என கேட்க....
வழக்கமாக இதற்கு முன்பே பூஜை முடிந்துவிடும். ஆனால் தீபங்கள் ஏற்றி முடிந்ததும் பூஜை செய்து கொள்ளலாம் என தாமதப்படுத்தினேன். உங்களுக்கு தெய்வ அணுக்கிரகம் இருக்கிறது அதனால்தான் நீங்கள் காணவேண்டும் என மாயம்மா பூஜையை தாமதப்படுத்தி இருக்கிறாள் என்றபடியே கார்த்திகை கொழுக்கட்டை ஒன்றை என் கையில் திணித்துவிட்டு பூஜையை தொடங்கினார்.
நானும் நடக்கப்போகும் அதிசயத்திற்காக காத்திருந்தேன். பூஜாரி மாயம்மாவின் முன் நின்று பூஜையை ஆரம்பித்ததுமே அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணா பெருங்குரலெடுத்து குலவை இட ஆரம்பித்தது. இதை கண்ணுற்ற எனக்கு மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்து விட்டது.
(தொடரும்.....)
Comments
Post a Comment