சேர்மன் அருணாசல சுவாமிகள் ஏரல்

*🌹🌺சேர்மன் அருணாச்சலசுவாமிகள்.. --ஏரல்...🌹🌺*

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம்.

அதாவது கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு தூதுவனாகவோ அல்லது ஏதோ ஒரு ஆபத்பாந்தவனாகவோ கூட நினைக்கலாம். எது எப்படியோ தன் கஷ்டம் பரிகாரம் ஆக உதவுபவருக்கு கடவுள் அந்தஸ்து கிடைக்கிறது. நாம் கோயில் கட்டி கொண்டாட இறைவன் புராணக் காலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமேயில்லை. அதனால்தான் நம் நாட்டில் தோன்றி  மக்களை நல்வழிப்படுத்திய மகான்களுக்கு இன்றும் நாம் கோயில்கட்டி கொண்டாடுகிறோம்.

ஏரல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு அழகான ஊர். அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருப்பது சேர்மன் அருணாச்சலசுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது. கேட்கவே புதுமையாக உள்ளதுதானே! இதன் பின்னனியை அறிந்துக் கொள்வோம். யாரிந்த சேர்மன் அருணாச்சலசுவாமி?

1880ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமசாமி-சிவனனைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடி. பெற்றோரின் விருப்பப்படி பல கலைகளையும் கற்றறிந்து ஆன்மீகப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த அருணாச்சலசுவாமிகள் சாயர்புரம் அருகேயுள்ள ஏரலுக்கு வந்து சேர்ந்தார். அங்கும் அவர் மவுன விரதம் இருந்து பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து வந்ததால் நாளடைவில் பிரபலமானார். அவரைக் காண பொது மக்கள் திரள ஆரம்பித்தனர். அப்படி தன்னைக் காண வரும் மக்களுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் ஆதரவாக இருந்து அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். அவரது நீதியும் நேர்மையும் அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுக்க அப்போதைய ஆங்கில அரசு அவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்ற அருணாச்சலசுவாமிகள் 1906ம் ஆண்டு தனது 26வது வயதில் சேர்மனாக பதவியேற்றார்.

அவர் ஒருநாள் தன் தம்பியை அழைத்து 1908ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் நாள் ஆடி அமாவாசை அன்று தான் இறைவனடி சேரப் போவதாகவும், அப்பொழுது அவரது உடலை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆலமரத்தினடியில் சமாதி அமைக்க வேண்டும். அப்பொழுது மேலே கருடன் வட்டமிடும் என்றுக் கூறினார். அவர் சொன்னது போலவே எல்லாம் நடந்தது. பக்தர்கள் அங்கே கோயில் கட்டி தினமும் ஏராளமானோர் அங்கு வந்து வணங்கி பயனடைந்து செல்கின்றனர். இக்கோயிலில் குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கி குணமடைந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.

உற்சவம்:

ஆடி அமாவாசை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா .ஆடி அமாவாசையன்று  தேரில் சேர்மன் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். அன்று காலை சுவாமி கற்பக பொன் தேரில் எழுந்தருளல், அபிஷேகம் முடிந்து, மாலை 6 மணிக்கு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி நடைப்பெறும். இரவு 10.30 மணிக்கு கோயில் மூலஸ்தானத்தில் கற்பூர தரிசனம் ஆலிலை சயன அலங்காரத்துடன் திருவிழா நிறைவுறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 37 கிமீ யும், திருச்செந்தூரிலிருந்து 16 கிமீ தொலைவிலும், ஸ்ரீவைகுண்டத்திலுருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரயில் மார்க்கமாகவோ, பேருந்திலோ, விமானத்திலோ செல்லலாம். ஏரலை சுற்றி ஏராளமான பழமைவாய்ந்தக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக திருச்செந்தூர் கடற்கரை முருகன் கோயில் அறுபடைவீடுகளில் ஒன்று. வைஷ்ணவத் தலங்களில் ஒன்றான ஆழ்வார் திருநகரி அங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. அதைத் தவிர ஸ்ரீவைகுண்டம், குறும்பூர் ஆதிநாராயணசுவாமிக் கோயில், நவத்திருப்பதி என்று பல திருத்தலங்கள் அருகில்  உள்ளன.

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்