வெங்கிடு சுப்பையா சுவாமிகள்
*🌺🌹வெங்கிடுசுப்பையா சுவாமிகள் - புக்கரம்பை..🌹🌺*
பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு சித்து விளையாட்டுகள் புரிந்தும் , மக்களின் பல்வேறு நோய்களை நீக்கியும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, இங்கு ஜீவ சமாதி அடைந்தவர் வெங்கிடு சுப்பையா சுவாமிகள். இவரின் ஜீவசமாதி பட்டுக்கோட்டை நகரில் தஞ்சை சாலையில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையை அடுத்த புக்கரம்பை கிராமத்தில் 1, 800ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் எளிய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் வெங்கிடு சுப்பையா. ஆரம்பம் முதல் ஆழமான பாதையிலேயே சிந்தனை சென்றதால் சிறுவயதிலேயே வடஇந்திய பகுதிகளில் உள்ள சித்தர்களிடம் தஞ்சமடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின்னர் பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு வருகை தந்தார்.
இப்பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு பல்வேறு சித்து விளையாட்டுகள் புரிந்தார். வயிற்றுவலி, உடல் உபாதை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக தன்னை நாடி வந்தவர்களின் நோய்களை திருநீறு கொடுப்பதன் மூலம் தீர்த்து வைத்தார். அவரின் சிஷ்யர் மாணிக்கம் முதலியாரின் நாட்டு மருந்துக்கடையில் நவ பாசானங்களை வாங்கி சாப்பிடுவாராம். ஆனால் அவருக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய மற்றொரு சிஷ்யர் நல்வழிக்கொல்லை கோபாலகிருஷ்ணனை தன்னுடன் ஆகாய மார்க்கமாக அழைத்துச் சென்று ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை தரிசனம் செய்ய வைத்தும் பல்வேறு சித்துகள் புரிந்துள்ளார்.
ஜன்னி நோய் வந்து இறக்கும் தருவாயில் இருந்தவர்களை தயிர் ஊற்றி காப்பாற்றியுள்ளார். 1873ம் ஆண்டு ஜீவ சமாதிஅடைவதற்கு 40 நாட்களுக்கு முன்பு ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைவதாக கூறியவர், தான் கூறிய அதே நாளில் உட்கார்ந்த நிலையில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஜீவ சமாதி ஆனவர். இன்றும் பல்வேறு வகையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து அருள்பாலித்து வருகிறார்.
Comments
Post a Comment